மருத்துவக் கலந்தாய்வு: இருப்பிடச் சான்றிதழை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு | Medical Consultation: A 5 member monitoring committee to examine the location certificate

0
7

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கேரளா மற்றும் தெலங்கானாவில் உள்ள தரவரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றது தெரியவந்தது. இதுகுறித்துத் தகவல் வெளியானதை அடுத்து, மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நேரு உள் விளையாட்டரங்கில் தகுந்த பாதுகாப்பு இடைவெளியுடன் தினமும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் 21 ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. .

2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டுப் பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 34 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “இன்னும் தொடர்கிறது அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியல் முறைகேடுகளும், முன்னுக்குப்பின் முரண்பாடுகளும்.

நீட் தேர்வுக்குத் தகுதியானவர்கள், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் கூறி வந்தாலும் 2017-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், நீட் தேர்வை அனுமதித்ததில் இருந்து இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடக்கும் நீட் தேர்விலும், அந்த நீட் தேர்வின் அடிப்படையில் அதிமுக அரசு தயாரிக்கும் ரேங்க் பட்டியலிலும், முறைகேடுகளும், மோசடிகளும் தடையின்றித் தொடர்கின்றன.

நீட் தேர்வையே ஆள்மாறாட்டம் செய்து எழுதினார்கள்; அதுவும் அதிமுக ஆட்சியிலேதான். அப்படி எழுதியவர்களில் சிலர் ஆதார் எண் இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆள்மாறாட்ட மோசடியையே கைகழுவிவிட்டது அதிமுக ஆட்சி. நீட் தேர்வில் வேறு மாநிலத்தவர், போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து இங்கும் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் எடப்பாடி அதிமுக ஆட்சியிலேதான்.

ஆகவே 2020-2021ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் – பிடிஎஸ் கல்வியில் சேருவதற்கான நீட் ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாகச் சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அதிமுக அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்வதோடு; அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

READ  சென்னை- கோவை வழித்தடத்தில் வரவேற்பை பெறாத அந்த ரயில்.. ரத்தாகிறது சேவை.. காரணம் என்ன? | chennai - coimbatore shatabdi express cancelled from december 1st due to not welcome people

”ஏற்கெனவே மத்திய அரசு தொகுப்புக்கு 15% இடங்களைக் கொடுத்துவிட்டோம். இனி இருப்பதைத் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழை ஆய்வு செய்யவும், அவர்கள் விவரங்களைச் சரிபார்த்து முறைகேடு எதுவும் நடக்காமல் ஆய்வு செய்யவும் 5 மருத்துவர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் 1. பராசக்தி, 2. செல்வராஜ், 3. ஆவுடையப்பன், 4. துணை இயக்குனர் – இந்துமதி, 5. ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி