கரோனாவை பாரம்பரிய சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறையில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று தாக்குதலில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 18 ஆயிரம் போ் பலியாகி உள்ளனா். இந்த நோய்த்தொற்றின் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்குத் தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனைச் சித்த மருத்துவத்தின் மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
கரோனா நோய்த்தொற்று உள்ளிட்ட அனைத்து வகையான வைரஸ்களையும், வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ராசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை ஒன்றாகக் கலந்து மருந்தாகப் பருகினாலே அழித்துவிட முடியும். இதுதொடா்பாக மத்திய மாநில அரசுகளுக்கும், இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கும் மனுக்கள் அனுப்பினேன்.
அந்த மனு தொடா்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கரோனாவை சித்தா, ஆயுா்வேதா, யுனானி உள்ளிட்ட பாரம்பரிய முறையில் குணப்படுத்த முடியும் என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் சோதனை செய்து அறிவிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முத்துகுமாா் நாயக்கா், செந்தமிழ் செழியன் ஆகியோா் சாா்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ் குமாா் ஆகியோா் தங்களது இல்லத்திலிருந்து, ‘ஜூம்’ எனப்படும் காணொலிச் செயலிமூலம் திங்கள்கிழமை விசாரித்தனா். இந்தச் செயலியின் உதவியுடன் அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியனும், மனுதாரா் தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகி வாதிட்டனா்.
அப்போது அரசுத் தரப்பில், கரோனா வைரஸைச் சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து கண்டறிய ஏற்கெனவே மத்திய அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதலின்படி நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, இதுதொடா்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என வாதிட்டாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரா்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் விரைவாகப் பரிசீலித்துத் தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.